Saturday, 9 July 2011

12. அசத்தியம் அழிந்தே தீரும்! ஹிஜாபை உறுதியாக கடைபிடிக்கும் பெண்களினால்...



அசத்தியம் அழிந்தே தீரும்!  
ஹிஜாபை உறுதியாக கடைபிடிக்கும் பெண்களினால்...
சமீப காலமாக மேற்கத்திய அரசாங்க உயர் மட்டத்திலும், அதைத் தொடர்ந்து உலக செய்தி ஊடகங்களிலும் இஸ்லாமிய ஹிஜாப் பூதகரமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.


இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பொய்ப் பிரச்சாரத்தின் பிரதிபலிப்பா?


இராக், ஆப்கானிஸ்தானில் தொடுக்கப்பட்ட போரில் படுதோல்வி அடைந்ததின் மன உளைச்சலா?


அந்த நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையா?


இஸ்லாமிய கலாச்சார ஒற்றுமையும் சகோரத்துவ வலிமையும் கண்ணைக் குத்துகிறதா?


அல்லது உலகத்திலிருந்து இஸ்லாத்தை அடியோடு ஒழித்துக்கட்ட எடுக்கப்பட்ட அனைத்து சூழ்ச்சிகளும் முயற்சிகளும் தோற்றுப் போய், நேர்மாற்றமாக துருக்கியிலிருந்து அனேக மேல நாடுகளிலும் இஸ்லாமியர்கள் ஆட்சி பிடிக்கும் பயம் மனதை உலுக்குகிறதா?


அல்லது இவை எல்லாமே காரணங்களாக அமைந்து விட்டதா? என்று சொல்ல முடியவில்லை.
உலக ரீதியில் இஸ்லாம் மட்டுமே மதக் கோட்பாடுகளையும், கலாச்சாரங்கைளயும் முழுமையாக பேணுவதில் தனித்தன்மை பெற்று விளங்குகிறது.


பெண்ணுரிமை என்ற பெயரில் மத கட்டுப்பாடுகளை எல்லாம் தூக்கி வீசி விட்டு மனோ இச்சைகளை சுதந்திரமாக கொண்டாடலாம் என்று போட்ட கணக்குகளும் திட்டங்களும் ஹிஜாபை உறுதியாக கடைபிடிக்கும் பெண்களினால் சுக்குநூறாகிவிட்டன.


ஆகவேதான் ஹிஜாப் ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது போலும்.


கணிசமான முஸ்லிம்கள் வாழும் பல நாடுகளுக்கு பல தடவை விஜயம் செய்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வுகளை சொல்லும் ஷைய்குல் இஸ்லாம் மெளலானா முஃப்தி முஹம்மது தகீ உஸ்மானி அவர்கள் சமீபமாக இரண்டு வார பயணமாக நம் நாட்டுக்கு வந்திருந்தார்கள்.
தாருல் உலூம் தேவ்பந்தில் மாணவர்களிடத்தில் பேசும் பொழுது அவர் சொன்ன ஒரு முக்கியமான கருத்தை இங்கே நினைவு கொள்ள வேண்டியது அவசியம்.


அவர்கள் சொன்னார்கள், உலகமெல்லாம் இஸ்லாத்திற்கு எதிராக சொல்லப்படும் அவதூறுகளைக் கண்டு நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. உண்மையில் அதை விட பன் மடங்கு சக்திவாய்ந்த மின் அலைகள் போல சாதகமான கருத்துக்கள் இஸ்லாத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கின்றன. நான் கண்கூடாக அதைப் பார்க்கிறேன். புதிய தலைமுறை இஸ்லாத்தின கோட்பாடுகளை மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்கிறது. மனிதர்களை கடுமையாக பாதிக்கும் பல முக்கியமான பிரச்சனைகளுக்கு இஸ்லாம் மட்டுமே சரியான தீர்வு சொல்கிறது என்று அறிவுஜீவிகள் பலர் நம்புகின்றனர்.


ஆகவே, தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்ற வணக்கக் கடமைகளில் நாம் பேணுதலாக இருப்பதுடன் மாற்றார்களுடன் நல்லுறவுகள், கொடுக்கல் வாங்கல், தூய்மை, துப்புரவு, நல்லொழுக்கங்கள், மனிதநேயம், அன்பு, பாசம், சேவை போன்ற நற்குணங்களிலும் முன்பு போல் மீண்டும் நாம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடிப்பது காலத்தின கட்டாயம்.


இயற்கைக்கும் மனிதனின் ஆழ்ந்த சிந்தனைக்கும் ஏற்றதான இஸ்லாத்தின் தூய்மையான கொள்கைகள் பலரையும் கவர்ந்து வரும் இவ்வேளையில் இறை நம்பிக்கையிலும், வாழ்வியல் மற்றும் செயல்முறைகளிலும் மிதமான கருத்துகளையும், போதனைகளையும் இஸ்லாம் உள்ளடக்கியுள்ளது என்பதை சொல் மற்றும் செயல் ரீதியாக நாம் எடுத்துக் காட்டினால் அசத்தியம் தானாக அழிந்து சத்தியம் இன்னும் வேகமாக பரவும் இன்ஷா அல்லாஹ் !


நன்றி: மனாருல் ஹுதா மாத இதழ்
Posted by: Girls Madhrasa, Mannargudi. 




No comments:

Post a Comment